சுவிசின் மிகப்பெரிய வங்கியாக உள்ள யு.பி.எஸ் வங்கிக்கு 200 கோடி டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் நிதி வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய ஊழலாக இது உள்ளது. முறையற்ற வங்கியாளர் ஒருவரின் நடவடிக்கையால் நடப்பு நிதியாண்டின் 3வது கால் இறுதியில் எதிர்மறையான வளர்ச்சியே இருக்கும் என யு.பி.எஸ் வங்கி எச்சரித்து உள்ளது.
வங்கி மோசடி நடவடிக்கை தொடர்பாக 31 வயது நபர் லண்டனில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வர்த்தக மோசடி நடவடிக்கை செய்தி வெளியானதும் வங்கியின் பங்குகள் 8 சதவீதம் சரிவு கண்டன. இருப்பினும் மதியம் முதல் அது மெல்ல மீட்சி அடைந்தது. வங்கிக்கு ஏற்பட்டு உள்ள இழப்பை தெரிவித்த யு.பி.எஸ் வங்கி எந்த மார்க்கெட் மோசடி வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிடவில்லை. இந்த மோடி நபர்களால் எந்த வங்கி வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படவில்லை என வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
வங்கியின் சொந்த பணத்தை ஊழியர் ஒருவர் சூதாடி உள்ளார். இது குறித்து யு.பி.எஸ் வங்கி விசாரணையை துவக்கி உள்ளது. உள் கட்டுப்பாட்டு ஆய்வு மோசடியை கண்டு பிடிக்காமல் தோல்வி அடைந்தது குறித்தும் வங்கி ஆய்வு செய்கிறது. சுவிஸ் யு.பி.எஸ் வங்கியில் குறிப்பிட்ட நபரால் ஏற்பட்ட இழப்பை தொடர்ந்து சுவிஸ் நிதி சந்தை மேற்பார்வை ஆணையமான பின்மா உஷார்படுத்தப்பட்டுள்ளது.