பல்சர் பண்ணாடைகளும்... கங்க் கறுமாந்திரங்களும்...!!!

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களை விட தற்கால சூழ்நிலையில் வாகன விபத்துக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ் அதிகரிப்பால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை மறுப்பதற்கில்லை. 


ஆனால் இவ் விபத்துக்கள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு பல தரப்பட்டவர்களிடமிருந்தும் பலவாறான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

அதாவது யாழ்ப்பாணத்தில் உள்ள வீதிகள் அகலம் குறைவு என்றும் மற்றும் தென்பகுதியில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

மேற்போன்ற கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட எமது இளைஞர், யுவதிகளின் செயற்பாடுகளும் இவ் விபத்துகளுக்கு மிகப் பெரும் காரணிகளாக அமைகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் பள்சர், கங்க். போன்ற மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தும் வேகம் என்பது கணக்கிட முடியாத ஒன்று.

அதாவது மோட்டார் சைக்கிள் மோதி ஒரு மின்கம்பமே முறிந்து விழுந்த அளவுக்கு யாழ்ப்பாண இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் செலுத்தும் வேகம் இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தின் எந்த வித பிரதான வீதியாக இருந்தாலும் சரி, சிறிய ஒழுங்கைகளாக இருந்தாலும் சரி இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் செலுத்தும் வேகம், அந்த வேகத்தில் சிக்கியவர்களின் நிலை என்பது கவலைக்கிடமானதே.

பிள்ளைகளுக்குக் காணி விற்று மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்து கொடுக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாது.

இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணத்துப் பெண்களின் மோட்டார் சைக்கிள் செலுத்தும் வேகம் குறைவானது என்று சொல்வதற்கில்லை எனலாம்.

அவர்களும் பள்சர்களின் வேகத்திற்கு இணையாக தமது சூட்டிப்பப்பைச் செலுத்தி வருகின்றனர். காதுகளில் கான்போனுடன் மோட்டார் சைக்கிள் செலுத்தும் இப் பெண்களினாலேயே அதிகளவு விபத்துக்கள் ஏற்படுகின்றது.

நான்கு சந்திகள் கொண்ட ஒரு வீதியில் நின்று நிதானமாக மோட்டார் சைக்கிள் செலுத்துவது என்பது யாழ்ப்பாணப் பெண்களுக்குப் பிடிக்காத விடயம்.

குதிரைக்கு மறைப்புக் கட்டியபோல் ஒரே நேர்பார்வைதான். அது எந்தச் சந்தியாக இருந்தாலும் சரி, எந்த வீதியாக இருந்தாலும் சரி.

எனவே இவ்வாறு வாகனம் செலுத்தும் இளைஞர்களினாலும், யுவதிகளினாலும்தான் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ச் சேதங்கள் ஏற்படுகின்றது என்பதும் மறுப்பதற்கில்லை.


நன்றி: மனிதா