தூக்கை ரத்து செய்ய அதிகாரம் இல்லை: ஜெ.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழ்க்கில் தூக்குதண்டனையை
எதிர்நோக்குவோரின் தண்டனைகளை ரத்து செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார்.

அம்மூவரும் எதிர்வரும் செப்டம்பர் 9 அன்று தூக்கிலிடப்படுவர் என்று தமிழக சிறைத்துறையில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அவர்களது தூக்கு தண்டனையை எதிர்த்து தமிழகம் முழுதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

கடந்த 2, 3 நாட்களாக இவ்விஷயம் குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டுவந்தாலும் முதல்வர் ஜெயல்லிதா எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மற்றவர்கள் தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் எனக்கோரி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் விளக்கம் அளித்த தமிழக முதல்வர், இக்கைதிகளது தண்டனை நிறைவேற்றம் தொடர்பில் தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.சட்டமன்ற அவை நடைமுறை விதி 110கீழ் ஜெயல்லிதா இந்த தனது நிலைப்பாட்டைத் தெரிவித்ததால் அது குறித்து மேல் விவாதம் எதுவும் நடக்கவில்லை.

2000வது ஆண்டில் அன்றைய திமுக அரசு நளினி மீதான தூக்கு தண்டனை மட்டுமே ரத்து செய்யப்படவேண்டும் என்று சிபாரிசு செய்ததன் விளைவே மற்ற மூவருக்கும் தூக்குதண்டனை உறுதியானது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், " ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தால் கூட அவரே அம்மூவரையும் மன்னித்திருப்பார். தூக்கு மேடையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அதன் பிறகு எத்தகைய தூய வாழ்க்கையை தொடருகிறார்கள் என்பதை அறிந்தவன் நான். எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்" எனக் கோரியிருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது உயிர்களைக் காக்க வலியுறுத்தி செப்டம்பர் 8ம் தேதி பத்து லட்சம் பேருடன் வேலூர் சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படவிருப்பதாக எச்சரித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை அருகே மறைமலை நகரில் ஞாயிறன்று நடந்த மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் இதனைத் தெரிவித்திருந்தார்.

மாநிலத்தில் ஆங்காங்கே தூக்கு தண்டனையினை ரத்து செய்யுமாறு வற்புறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன

தீக்குளிப்பு

ஞாயிறு மாலை சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில், மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த 21 வயதான செங்கொடி என்ற பெண் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்று கோரி தீக்குளித்து உயிர்நீத்துள்ளார்.