உண்ணாவிரதத்தை முடித்தார் அன்னா ஹசாரே

இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அன்னா ஹசாரே
அவர்கள் இரண்டு வார காலமாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக தீவிரமான சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற இவரது கோரிக்கைக்கு இந்திய நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆர்ப்பரித்த ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், இந்த போராட்டம் உலகத்துக்கே ஒரு பாடம் என்றும், இது இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார்.

அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகியது. இவரது போராட்டத்தை இந்தியா சுதந்திரம் பெறும் முன் காந்தி நடத்திய போராட்டங்களோடும் ஒப்பிடப்பட்டது.

இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரிடம் காணப்படும் கோபத்தின் குரலாக ஹசாரே ஒலித்தார் என்பதில் ஐயமில்லை.

இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால் பொது வாழ்வில் காணப்படும் லஞ்ச லாவண்யம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னா ஹசாரேவின் போராட்டத்தால் இந்திய நாடாளுமன்ற கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டதாகவும் ஒரு சாரார் கவலைபடுகின்றனர். பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை இது மிகவும் சோதித்து விட்டதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.