லிபிய தலைநகர் திரிபோலியில் மையப்பகுதியில், கொரிந்தியா ஹொட்டலைச் சுற்றவரவுள்ள பகுதிகளில் கடுமையான சண்டைகள் மூண்டிருக்கின்றன.
கேணல் கடாபியின் ஆதரவுப் படைகளுக்கும், கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே தெருவுக்குத் தெரு மோதல்களும், சினைப்பர் தாக்குதல்களும் நடந்துகொண்டிருந்ததாகவும், இரு தரப்புக்கும் இடையே தன்னியக்க துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
திரிபோலியின் முக்கிய சிறைச்சாலைக்கு அருகேயும் கடுமையான சண்டை நடப்பதாக ஒரு கிளர்ச்சிப் படை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
காலையில் முன்னதாக பிபிசி குழு சண்டையின் நடுவில் அகப்பட்டுக்கொண்டது.
கேணல் கடாபியின் சொந்த ஊரான சிர்டே நகரில் முன்னேறுவது குறித்து கிளர்ச்சிக்காரர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.
இதற்கிடையே சண்டையில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் நூற்றுக்கணக்கானவர்களை தடுத்து வைத்திருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
சில கைதிகளை தாம் சென்று பார்த்ததாகவும், ஆனால் அவர்களை தடுத்து வைத்திருப்பது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தலைநகருக்கான உணவு, நீர் மற்றும் மருந்து விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், பல கடைகள் மூடப்பட்டிருப்பதாகவும் பிபபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிளர்ச்சிப் படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சனம்
லிபியாவில் நேட்டோப் படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்பது தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்று தென் ஆப்பிரிக்கா கோரியுள்ளது.
ஆனால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு, நேட்டோ உறுப்பினர்களையோ அல்லது அதன் படைத் தளபதிகளையோ நீதியின் முன் நிறுத்தும் வல்லமை உள்ளதா என்பதே தற்போதுள்ள கேள்வி என்று, தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் அதன் துணை அதிபர் கக்லேமா மொட்லாண்ட்டே தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையால் முடக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் ஒன்றரை பில்லியன் டாலர்கள் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா எடுத்த முயற்சிகளை தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே தடுத்துள்ளது.
லிபியாவின் கிளர்ச்சியாளர்களை அங்கீகரிப்பது குறித்து ஆப்பிரிக்க ஒன்றியமும், தென் ஆப்பிரிக்காவும் முடிவு ஏதும் எடுக்காத நிலையில், லிபியாவின் கிளர்ச்சித் தலைவர்களுக்கு நிதியுதவி செய்வது என்பது, அதை அங்கீகரிப்பதாகிவிடும் என்றும், ஐநாவுக்கான தென் ஆப்பிரிக்கத் தூதர் தெரிவித்துள்ளார்.
ஆனால் கேணல் கடாபியின் இரண்டு முன்னாள் கூட்டாளிகளான சாட் மற்றும் புர்கினோ ஃபாஸோ உட்பட பல ஆப்பிரிக்க நாடுகள் லிபிய தேசிய இடைக்கால அரசை அங்கீகரித்துள்ளன.