பதவி விலகினார் ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ்

உலகின் மிகப்பெரிய கணினி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தை இணைந்து உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ்,
அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவிலியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

எனினும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக அவர் தொடருவார் என்றும், தலைமை நிர்வாக அதிகாரியாக டிம் குக் பொறுப்பேர்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

பித்தப்பையில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக, வெளியே அறிவிக்கப்படாத ஒரு இடத்தில் அவர் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார்.
உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற, மெக்கிண்டாஷ் கணினிகள், ஐ பாட், ஐ ஃபோன், ஐ பேட் போன்ற அதிநிவீன தொழில்நுட்பம் வாய்ந்த பொருட்களை உருவாக்கியதில் அவரது பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது.

அவர் ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்துகிறார் என்றால் அவை பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தின.
ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் தலைமையில், ஆப்பிள் நிறுவனம் பெருமளவில் மதிக்கப்படும் மதிப்பு வாய்ந்த நிறுவனமாக உருவாகியது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்கிற பதவியில், தன் மீதிருக்கும் எதிர்பார்ப்பை, தன்னால் செயல்படுத்த முடியாது என்று தான் கருதும் ஒரு நாள் ஏற்படுமானால், அப்படியான முடிவை அனைவருக்கும் முதலாவதாக அறிவிக்கும் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்றும் அந்த நாள் தற்போது வந்துள்ளது என்றம் தனது பதவி விலகல் குறித்த கடிதத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தெரிவித்துள்ளார்.

வர்த்தகத் தொழில்நுட்பத் துறையில் ஆப்பிள் நிறுவனம் பெருமளிவில் வெற்றி பெற்றது. 1976 ஆம் ஆண்டு தனது நன்பர் ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் சேர்ந்து தமது தந்தையின் கார் நிறுத்தும் இடைத்தில் ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

தொழில்நுட்ப ரீதியாக ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் அதன் போட்டியாளர்களை விட ஒரு அடி முன்னால் இருந்தாலும், ஆராய்ச்சிக்கான செலவினங்களைப் பொறுத்தவரையில், போட்டியாளர்களான மைக்ரோசாஃப்ட், நோக்கியா போன்ற நிறுவனங்களை விட குறைவாகவே ஆப்பிள் செலவு செய்கிறது.