லிபியாவில் இறுதிச் சண்டைக்கு ஆயத்தம்

லிபியாவின் கிழக்கிலுள்ள பின் ஜவாத் என்ற சிறிய நகரத்துக்கு கூடுதலான ஆயுதப் படைகளை கிளர்ச்சிக்காரர்கள் அனுப்பிவருகின்றனர்.

கர்ணல் கடாஃபியின் சொந்த ஊரான சிர்டிக்குள் நுழையும் முன்பாக பின் ஜவாத்தை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

கடந்த ஆறு மாத காலத்தில் பின் ஜவாத் நகரை மூன்று தடவை கிளர்ச்சிக்காரகள் கைப்பற்றியிருந்தாலும், மூன்று தடவையுமே அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டிருந்தனர்.

ஆனால் கர்ணல் கடாபியுடைய படைகள் வலுவாகவுள்ள நாட்டின் கடைசி இடமான சிர்டிக்குச் செல்வதற்கு முன்னால் இவ்விடம் தம்வசம் ஆகவேண்டும் என்று கிளர்ச்சிக்காரகள் விரும்புகின்றனர்.

சிர்டிதான் கடாஃபி விசுவாசிகள் கடைசியாக மோதிப்பார்க்கின்ற ஒரு இடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிர்டிக்கான படை முன்னெடுப்புகள் அடுத்த சில நாட்களில் துவங்கும் என்று கருதப்படுகிறது.

கிளர்ச்சிப் படையினர் தொடர்ந்து அப்பகுதிக்கு டாங்கிகள், ராக்கெட் ஏவும் பீரங்கிகள் உள்ளிட்ட தளபாடங்களையும் துருப்பினரையும் அனுப்பிவருகின்றனர்.

கிளர்ச்சிக்காரர்கள் வேகமாகத்தான் இருக்கிறார்கள் என்றாலும், எதிர்பாராத அளவுக்கு கடுமையான எதிர்த் தாக்குதல்களையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள்.

சிர்டி செல்லும் பாதையில் மட்டுமே கடாஃபிக்கு விசுவாசமான படையினர் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
"கிளர்ச்சிப் படையினரின் வருகையைத் தாமதப்படுத்துவதுதான் இவர்களது நோக்கம். சிர்டியை தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை கடாபிக்கு விசுவாசமான படைகள் செய்துவருகின்றனர்." என கிளர்ச்சிப் படைத் தளபதி ஒருவர் கூறினார்.

சிர்டியில், எதிராளிகள் எனத் தெரிவோரையெல்லாம் பிடித்துக் கொல்கிறார்கள் என்றும், கடாஃபின் மகன் அங்குதான் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அத்தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை உறுதிசெய்ய முடியவில்லை.

அதேநேரம் திரிபோலியின் சர்வதேச விமான நிலையத்தினுள்ளும் அதனைச் சுற்றியும் கடுமையான சண்டைகள் நடந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
திரிபோலி நகரின் பிற பாகங்களில் சண்டைகள் ஓய்ந்து அமைதி நிலவுவதாகவும், ஆனால் ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயிரக்கணக்கானோரை வீதிகளில் காணக்கூடியதாக இருப்பதாகவும் அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.