அம்பாறை: மீள்குடியேற்றமின்றி மக்கள் தவிப்பு

இலங்கையின் கிழக்கே, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள
கஞ்சிக்குடிச்சாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் கிராமங்களில் போர்க் காலத்தில் புதைக்கப்பட்ட மிதிவெடிகளை அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்து 6 மாதங்கள் கடந்து விட்ட போதிலும், அங்கிருந்து இடம்பெயர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையே அங்கு காணபப்டுகின்றது

அரசாங்கத்தினால் இதுவரை மீள் குடியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், சில குடும்பங்கள் தமது வாழ்வாதாரம் கருதி தாமாகவே அங்கு சென்று இருப்பிடம் உட்பட அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் மீளக்குடியேறியுள்ளன.

இந்த கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசம், அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய பிரதான தளங்கள் அமைந்திருந்த பகுதியாக போர்க் காலத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இறுதியாகவே இந்தப் பிரதேசம் மீட்கப்பட்டிருந்தது.

2006 ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ம் திகதி இந்த கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்கள் போர்ச சூழல் காரணமாக அங்கிருந்து வெளியேறி அயல் கிராமங்களில் அகதிகளாக தஞ்சம் பெற்று வாழ்ந்ததாகக் கூறும் கஞ்சிக்குடிச்சாறு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் செல்வராசா கமலேஸ்வரன், மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை மீள் குடியேற்றம் நடைபெறவில்லை என்றார்.

மீள் குடியேற்றமின்றி தொடர்ந்தும் அகதிகளாகவே உள்ள தமது கிராம மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்பட்ட உணவு நிவாரணம் கூட ஒரு வருடத்திற்கு முன்னதாக நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
'எமது மீள்குடியேற்றம் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது' என கவலையுடன் கூறினார் கமலேஸ்வரன்.
அரசாங்கத்தினால் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் தன்னார்வ தொண்டர் அமைப்புகள் கூட தங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க முன்வருவதாக இல்லை என சமூக சேவகியான ரதிதேவி மதியழகன் சுட்டிக்காட்டினார்.

குறித்த கிராமங்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் கேட்டபோது, எதிர்வரும் பருவ மழைக்கு முன்னதாக இக் குடும்பங்களை மீள்குடியேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பதிலளித்தார்.