1000 சிறார்களை காணவில்லை

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த இரண்டு ஆண்டுளுக்கு மேலாகின்ற நிலையில்,
இறுதி யுத்தத்தின் போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற சிறுவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.

காணாமல்போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன சிறார்களில், ஐநாவின் சிறார்கள் நல அமைப்பாகிய யுனிசெஃப் நிறுவனம் மற்றும் பல்வேறு அரச அமைப்புக்களின் உதவியோடு 600 பேர் வரையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளினால் மேற்கொண்ட ஆட்சேர்ப்பினால் 64 வீதமானோர் காணாமல் போயிருப்பதாகவும், 30 வீதமானவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் காணாமல் போயிருப்பதாகவும் யுனிசெஃப் கூறியிருக்கின்றது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்தபோது சுமார் 3 லட்சம் மக்கள் வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்தபோது, இறுதிச் சண்டைகள் நடைபெற்ற இடத்திற்கு வெளியில் இருந்த பெற்றோர்கள் பலர் காணாமல் போயிருந்த தமது பிள்ளைகளைத் தவிப்போடு தேடிக்கொண்டிருந்தார்கள்.

இவர்களில் பலர் கண்ணீரோடு வந்து தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தருமாறு தன்னிடம் கோரியதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

பெற்றோர்களின் வேண்டுகோள்களையடுத்து, வவுனியா மாவட்டத்தில் ஐநாவின் சிறுவர்களுக்கான நிதியம் மற்றும் சிறுவர்களின்
நலன்களுக்காகச் செயற்படுகின்ற அரச திணைக்களங்களையும் இணைத்து, ஹெல்ப் லைன் என்ற பெயரில் காணாமல் போன சிறுவர்களைக் கண்டுபிடிப்பதற்கான அமைப்பொன்று உருவாக்கப்பட்டதாக வவுனியா அரசாங்க அதிபர் கூறினார்.

இந்த அமைப்பிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் காணாமல் போயுள்ள தமது பிள்ளைகளைத் தேடிக்கண்டு பிடித்துத் தருமாறு எழுத்து மூலமாகவும் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இவர்களில் 600 பேர் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், ஏனையோரைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஒரு வலைப்பின்னலாகப் பாதுகாப்பு அமைச்சு உட்பட பல்வேறு பிரிவுகளின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.