இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் பகுதியில் காணிகள் தொடர்பான விபரங்கள் அரசால் சேகரிக்கப்படுகின்றன.
முதற்கட்டமாக நல்லூர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம சேவகர்கள் பிரிவில் உள்ள குடும்பங்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு தகவல்கள் பெறப்படுவதாக கூறப்படுகின்றது.
அரசால் விநியோகிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில், காணியின் விபரம், சொந்தக்காரர் யார், பரப்பளவு, காணி பதிவு செய்யப்பட்ட திகதி போன்ற விபரங்கள் கோரப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் சட்ட ஆலோசகரும், மூத்த சட்டத்தரணியுமான அருளம்பலம் ராஜரட்னம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
நாட்டின் மற்ற பகுதிகளில் இல்லாத வகையில் யாழ் பகுதியில் மட்டும் இப்படியான விபரங்களை கோருவது அரசியல் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
பகிரங்கமாக வெளியிடப்பட்டு தகவல்கள் கோரப்படும் நிலையில், இந்தப் படிவத்தில் குறிப்பிடப்படும் விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ள நிலையில், காணி தொடர்பான தகவல்களை இரகசியமாக வைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் சட்டத்தரணி ராஜரட்னம் சுட்டிக்காட்டுகிறார்.