சேதன விவசாயம் (Organic Farming)

சேதன விவசாயம் என்பது விவசாய பண்ணையை உயிருள்ள ஒரு தொகுதியாக கருதி, சூழலுடன் இசைவான முறையில், இயற்கையாக கிடைக்கும் உள்ளீடுகளை பயன்படுத்தி, பொருளாதார ரீதியில் பயனளிக்;கக்கூடிய உற்பத்திகளை மேற்கொள்வதை நோக்கமாக கொண்ட ஒன்றிணைந்த விவசாய முறையாகும்.


இவ்விவசாய முறையின் அடிப்படை தத்துவமானது, பண்ணையில் ஆரோக்கியமானதும் உயிர்வாழ்கின்றதுமான மண்ணை உருவாக்குவதன் மூலம் ஆரோக்கியமான பயிர்களை உற்பத்தி செய்வதாகும்.



விவசாயமானது இயந்திரமயமாக்கப்பட்டதும் கிருமிநாசினிச் சேர்வைகள் உணவில் தேக்கமடைந்ததனால் பல சுகாதார பிரச்சனைகளுக்கு காரணமாய் அமைந்ததும், உயிரங்கிகளும் அவற்றின் இருப்பிடங்களும் அழிவடைந்தமையும் சூழல் மாசடைந்தமையுமாகும்.
சேதன விவசாயமுறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் தரத்தில் உயர்ந்தவையாகவும் சந்தையில் அதிக விலைவாய்ப்பை பெறக்கூடியவையாகவும் உள்ளன.
சேதன விவசாய முறையில் மேற்கொள்ளப்படும் சில நடைமுறைகள்
  • பயிர்வகைகளை மாற்றி மாற்றி நடல்; (சுழற்சி முறை பயிர்ச்செய்கை)
  • விலங்கு, கால்நடை உரப்பாவனை
  • கூட்டெருப் பாவனை
  • இலைப்பசளை பாவனை (பசுந்தாற் பசளை)
  • அவரை இனப் பயிர்களை வளர்த்தல்
  • பல்லின பயிர்களை வளர்த்தல்
  • உயிரியல் முறையில் பீடைகளை கட்டுப்படுத்தல்
  • இயந்திரங்கள் மூலம் களைகளை கட்டுப்படுத்தல்
சேதன விவசாய முறையில் தடைசெய்யப்பட்ட சில நடைமுறைகள்
  • செயற்கையான நஞ்சூட்டப்பட்ட பீடை நாசினிப் பாவனை
  • செயற்கையான இரசாயனப் பசளைகள்
  • செயற்கையான வளர்ச்சி ஹோர்மோன்கள்
  • செயற்கையான உணவுகளை உட்கொண்ட விலங்குகளின் கழிவுகள்
சேதன விவசாயப் பண்ணையில் பீடைகளின் கட்டுப்பாடு

சேதன விவசாயப் பண்ணையின் அடிப்படைத் தத்துவமானது தாவரங்களுக்கு உயர் போசணையை பெற்றுக்கொடுத்து அதன்மூலம் தாவரங்களின் வீரியமான வளர்ச்சிக்கு உதவுவதன்மூலம் பீடைகளினால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாப்பதாகும்.  இம்முறையில் மேற்கொள்ளப்படும் சில செயற்பாடுகளாவன:
  • பாதுகாப்பு பயிர்களை நடல்
  • தொடர்ச்சியாக பயிர்களை மாற்றுதல்
  • பல்வின (mixed crops) பயிர்செய்கையை மேற்கொள்ளல்
  • பல் வகையான மண் உயிரினங்களை பாதுகாப்பதோடு சூழலுக்கு நன்மைபயக்கும் பூச்சிகளினதும் பறவைகளினதும் உதவியினால் பீடைகளை ஒழித்தல்
  • பீடை கட்டுப்பாட்டு முறை தோல்வியடையும் போது இரைகவ்விகளின் பாவனை மூலம் அவை பரம்பலடைவதை தடுத்தல், பொறி அல்லது தடைகளை பாவித்தல்
இவ்வனைத்து முறைகளின் மூலமாகவும் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது மாத்திரம் இயற்கையான அல்லது சேதன பீடை நாசினிகளை (வேப்பம் விதை, புகையிலை, காஞ்சோந்தி, இஞ்சி, மிளகாய், மிளகு, வெள்ளைப்பூடு போன்றவற்றில் இருந்து தயாரித்த  திராவகங்களை) பயன்படுத்தலாம்.
சேதன விவசாயத்தின் பிரதான கொள்கைகள்
  • உற்பத்தி செய்யப்படும் உணவானது போஷணை மட்டத்தில் உயர்வானதாக இருப்பதோடு போதியளவு உற்பத்தி செய்யப்படவும் வேண்டும்.
  • அனைத்து இயற்கையான செயற்பாடுகள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதன் மூலம் தாவர, விலங்கு மண்ணிலுள்ள நுண்ணங்கிகள் என்பவற்றுடன் மண்ணின் வளத்தையும் அதிகரிக்க செய்ய வேண்டும்.
  • மண்ணின் வளத்தன்மையை நீண்ட காலத்திற்கு பேண வேண்டும்.
  • இயலுமானளவு மீள்சுழற்ச்சிக்குட்படுத்தக்கூடியதும் பிரிந்தழியக்கூடியதுமான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
  • விவசாய பண்ணையிலுள்ள விலங்குகளின் இயற்கையான நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சுதந்திரமாக வாழ இடமளிக்க வேண்டும்.
  • சேதன விவசாய முறையில் விலங்குகளின் சேமநலத்தை பேணுவது மிக முக்கியமான நடவடிக்கையாகும். இங்கு விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடையில் பிணக்குகள் ஏற்படாதவண்ணமும், இரண்டிற்குமிடையில் உள்ளுறவு ஒன்றை ஏற்படுத்தி பாதுகாத்து வர வேண்டும்.
  • விலங்குகளின் உணவு சேதன உணவாக இருப்பதோடு அதனை முடியுமான அளவு பண்ணையிலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தேவையான அளவு விலங்கு உரமும் ஏனைய விலங்கு உற்பத்தியையும் பெற்றுக்கொள்ளலாம்.
  • பண்ணை நடவடிக்கைகளின் போது அனைத்து விதமான மாசடைதலையும் குறைத்துக் கொள்ளவேண்டும் (மண், நீர் என்பன மாசடைதல்).
  • பண்ணையிலும் அதன் சசூழலிலும் உள்ள பல்வகைத்தன்மையை பாதுகாக்க வேண்டும்.
  • பண்ணை வேலையாட்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு அவர்களை திருப்திப் படுத்தும் விதத்தில் நடந்துகொள்ளவும் வேண்டும்.
  • பண்ணை நடவடிக்கைகள் மூலம் எந்தவித சூழல், சமூக பிரச்சினைகள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.