விமர்சனங்களுக்கு உள்ளாகிறது டோனியின் தலைமை

இந்திய கிரிக்கெட்டில் சிறந்த வெற்றி கேப்டன் என்று அழைக்கப்பட்ட டோனி இன்று கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருகக்கிறார். இங்கிலாந்தில் அவரது தலைமையிலான இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது.

30 வயதான டோனி 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். 2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த அறிமுக 20 ஓவர் உலக கோப்பையில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில் கோப்பையை பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்தார்.
இதனால் அவரது புகழ் உயர்ந்தது. இதற்கு பலனாக ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். டிராவிட் விலகியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அணியை உச்சாணிக்கு அழைத்து சென்றார். கடந்த மார்ச்- ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடந்த உலக கோப்பையை பெற்றுக்கொடுத்தார்.
28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை இந்தியா கைப்பற்ற டோனி தலைமையும், இறுதிப்போட்டியும் அவரது அதிரடி ஆட்டமும் முக்கிய பங்கு வகித்தது என்பது எந்த சந்தேகமும் இல்லை. 2008-ம் ஆண்டு ஆக்டோபர்- நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவில் விளையாடியது. கும்ப்ளே டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து பாதியில் விலகினார்.
இதனால் 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டியில் முத்திரை பதித்த டோனிக்கு டெஸ்ட் கேப்டன் பதவியும் கிடைத்தது. டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றபிறகு டோனி தலைமையில் இந்திய அணி தொடரை இழந்தது இல்லை. தற்போது முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழக்கிறது.
இங்கிலாந்தில் விளையாடி வரும் அவரது தலைமையிலான அணி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டிலும், நாட்டிங்காமில் நடந்த 2-வது டெஸ்டிலும் மோசமாக தோற்றது. தற்போது பர்மிங்காமில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டிலும் தோற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் “நம்பர் 1” இடத்துக்கு உயர்த்திய அவரது அணி அதில் இருந்து இறங்குகிறது. அதோடு முதல் முறையாக டெஸ்ட் தொடரையும் இழக்கிறது.
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது தலைமையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்பிறகு 2009-ம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்து சென்று 1-0 என்ற கணக்கில் தொடரை வென்று முத்திரை பதித்தது.
பின்னர் உள்ளூரில் நடந்த இலங்கை (2-0), அவுஸ்திரேலியா (2-0), நியூசிலாந்து (1-0) ஆகிய நாடுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. வங்காளதேசம் (2-0), வெஸ்ட் இண்டீஸ் (1-0) ஆகிய நாடுகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் தொடரை வென்றது. தென்ஆப்பிரிக்கா (2முறை), இலங்கை ஆகிய நாடுகளுக்கு எதிரான தொடர் சமநிலையில் முடிந்தது.
தற்போது இங்கிலாந்து மண்ணில் அந்த அணியை சந்திக்க டோனி தலைமையிலான இந்திய அணி கடுமையாக தினறி வருகிறது. இங்கிலாந்து வேகப்பந்து வீரர்களான ஆண்டர்சன், பிராட், பிரெஸ்னென் ஆகியோரின் அபாரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் துடுப்பாட்டக்காரர்கள் திணறுகிறார்கள். அதே நேரத்தில் பந்துவீச்சாளர்களாலும் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை. டோனிக்கு இது சோதனை காலமாகும்.