இங்கிலாந்தின் பிராட், பிரெஸ்னன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணியில் கேப்டன் டோனியின் ஆட்டம் மட்டும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது. அவர் 77 ரன்கள் எடுத்தார்.
பர்மிங்ஹாம் எட்க்பாஸ்டன் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் இல் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.
மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள கம்பீர், சேவாக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
முதல் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து ரன் கணக்கை கம்பீர் தொடங்கினார். ஆனால் பிராட் வீசிய 2-வது ஓவரின் முதல் பந்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சேவாக், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவரது கை உறையில் பந்துபட்டு, விக்கெட் கீப்பர் பிரையர் கையில் தஞ்சமடைந்தது.
இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடி வரும் திராவிட் அடுத்து களம் இறங்கினார். இருவரும் சிறிது நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினார். அணியின் ஸ்கோர் 59 ஆக இருந்தபோது, கம்பீர் 38 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த சச்சின் 1 ரன் மட்டுமே எடுத்து பிராட் பந்து வீச்சில் ஆண்டர்சனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து லட்சுமண் களமிறங்கி நிதானமாக ஆடத் தொடங்கினார்.
இந்நிலையில் 22 ரன்கள் எடுத்திருந்த திராவிட், பிரெஸ்னன் பந்தில் போல்ட் ஆனார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. திராவிட் கடந்த இரு டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
அடுத்து ரெய்னா 4 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். சற்று வேகமாக விளையாடி லட்சுமண் 41 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மிஸ்ரா 4 ரன்களில் வெளியேறினார். கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடாத கேப்டன் டோனி இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடி அரைசதம் அடித்தார். பிரவீண் குமார், தோனியுடன் ஜோடி சேர்ந்து ஸ்கோர் உயர உதவினார். பிரவீண் குமார் 26 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 200 ரன்களைக் கடந்தது.
ஸ்கோர் 224 ஆக இருந்தபோது 77 ரன்கள் எடுத்திருந்த தோனி ஆட்டமிழந்தார். அடுத்து இஷாந்த் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 224 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. ஸ்ரீசாந்த் ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தார். இதையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்ஐ தொடங்கியது.